இறைவனின் ஆசனம்
(முதல் பகுதி)
உலகில் உள்ள அனைத்திற்கும் இறைவனே முதலானவன். அவனுக்கு முந்தியது என்று எதுவுமே இல்லை. அது போல் அனைத்திற்கும் முடிவும் இறைவனே ஆவான். அவனைத் தவிர அனைத்தும் அழிந்து விடும்.
இறைவன் அமரும் ஆசனம் ஒன்று நம்மிடம் உள்ளது. ஆனால் அது தூசியிடனும் கரை படிந்தும் அழுக்குகள் நிறைந்தும் காணப்படுகிறது. இறைவனுக்கு என இருக்கும் அந்த ஆசனத்தில் நாம் தான் இறைவனை அமர விடாமல் தடுத்து பெருங் குற்றத்தை புரிந்து வருகிறோம்.
நான் எந்த ஆசனத்தை பற்றி பேச வருகிறேன் என்று தெரிகிறதா? 'கல்ப்' என்ற இதயத்தை பற்றித் தான். நம் இதயத்தில் ஷைத்தானுக்கு தான் முதலிடம் கொடுத்து இருக்கிறோம். ஏராளமான குப்பைகள் நம் இதயத்திற்குள் இருக்கின்றன.
அறிவு கூட ஒரு வகையில் குப்பையை சேர்ந்தது தான். அறிவு தான் சிறந்தது என்றால் இப்லீஸ் இறைவனிடம் வாதிட்டது சரி என்றாகி விடும். இறைவன் விரட்டியடித்தது கூட அறிவு என்ற இப்லீஸை தான்.
இறை நேசர்களை நம் அறிஞர்களுக்கு புரியாமல் போனது அப்படி ஒன்றும் ஆச்சரியமான செய்தி அல்ல. ஹிளுர்(அலை) அவர்களின் செயல்கள் நபி மூஸா(அலை) அவர்களுக்கு புரிந்ததா என்ன?
இறைவன் தனது திருமறையில் (25:53 மற்றும் 55:20) இரு கடல்களுக்கு இடையில் திரையையும் மீற முடியாத தடையையும் ஏற்படுத்தியிருப்பதாக கூறுகிறான்.
கடல் இரண்டு சேரும் போது ஏற்படும் திரையை (உஷ்ணம், உப்பின் அளவு) நீங்கள் அறிவை வைத்து கடலில் சென்று ஆராய்ந்து பார்க்கலாம். ஜாக்ஸ் காஸியோ என்ற கடல் நீர் ஆராய்ச்சியாளர் அப்படி தான் ஆராய்ச்சி செய்து இஸ்லாத்தை தழுவினார் என்பது உண்மை வரலாறு.
ஆனால் மூஸா நபியவர்கள் ஹிளுர்(அலை) அவர்களை காண செல்லும் போது 'இரு கடல்கள் சந்திக்கும் இடத்தை அடையும் வரை நான் செல்வேன்..' (திருக்குரான் 18:60) என்று கூறுகிறார்கள்.
தப்ஸீர் பைழாவியில் இரண்டு கடல்கள் என்பது புற அறிவாகிய மூஸாவும் உள் அறிவாகிய ஹிள்ரும் ஒன்று சேருதல் என்று விளக்கம் கூறப்பட்டுள்ளது. சிந்திக்க வேண்டும்.
ஹிளுர்(அலை) அவர்கள் (திருக்குரான் 18:78) 'எனக்கும் உங்களுக்கும் இடையில் இதுவே பிரிவினை(க் குரிய நேரம்)' என்று சொன்னார்கள்.
புற அறிவிற்கும் உள் அறிவிற்கும் எத்தகைய தடையை ஏற்படுத்தியிருக்கிறான் என்று உணர்ந்து படிப்பவர்களுக்கே விளங்கும்.
சிந்திப்போம்..
முஹம்மது இஸ்மாயில்
No comments:
Post a Comment